×

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி

டெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சிட்யின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் 34 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 50 வயதுக்கு உட்பட்ட 47 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

28 பெண்கள், இளைஞர்கள் 47, பட்டியலினத்தவர் 27, பழங்குடியினர் 19, ஓபிசி பிரிவினர் 57 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காந்தி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, போர்பந்தர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனேவால், அசாம் மாநிலம் திப்ரூகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், உதம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்

மலையாள நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி, திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோனி, பாஜக சார்பில் பத்தனம்திட்டாவில் போட்டியிடுகிறார். ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர், திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சலப் பிரதேசம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கேரளா 12, சத்தீஸ்கர் 11, அசாம் 11 ஜார்க்கண்ட் 11, மத்தியப் பிரதேசம் 24, மேற்குவங்கம் 20, குஜராத், ராஜஸ்தானுக்கு தலா 15 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது.

தமிழ்நாட்டுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு இல்லை
பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. தமிழ்நாட்டில் அண்ணாமலை போட்டியிடுவார், முதற்கட்ட பட்டியலில் அவர் பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் பெயர்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடம்பெறவில்லை.

 

The post பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,PM Modi ,Varanasi ,Delhi ,Akakhchidhi ,general secretary ,Vinod Dawde ,Lok Sabha elections ,Narendra Modi ,EU ,Dinakaran ,
× RELATED மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜ அனுமதிக்காது ; ஜே.பி.நட்டா பிரசாரம்